சென்னை: சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொதுவெளியில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்து மதத்தில் உள்ள சைவம் மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'அமைச்சர் பொன்முடி கூறிய கருத்துகள் ஏற்கக் கூடியதல்ல.' என்று கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த 12 ஆம் தேதி அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கையில், "தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,"என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - அனுமதி அளிக்காததால் அதிமுக வெளிநடப்பு!
எனினும் அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் நீக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பொன்முடிக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அதிமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அவரது பேச்சு கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. மேலும் குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது.
அவரது சர்ச்சை குறித்த பேச்சுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்."என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.