சேலம்: காடையாம்பட்டி வட்டம் டேனிஸ்பேட்டை பெரிய வடகம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி, அம்மு தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் (11) பெரிய வடகம் பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 05 ஆம் தேதி பள்ளி முடிந்து மாணவன் வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்த போது, “மாற்று சாதியினர் தெருவில் நடந்து வந்ததாகவும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நீ எப்படி எங்கள் தெருவில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்கலாம்?” என்று இரண்டு பெண்கள் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வீட்டிற்கு வந்த மாணவன் நடந்த தாக்குதல் குறித்து தனது தாய் மற்றும் தந்தையிடம் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து மாணவரின் தாயார் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (மார்ச் 15) மனு வழங்கினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து மாணவரின் பெற்றோர்கள் கூறுகையில், “ எனது மகன் என்ன தவறு செய்தான்? ஏன் அடித்தார்கள்?. எனது மகனின் கழுத்து மற்றும் கண் பகுதியை காய்கறிகள் விற்கும் இரண்டு பெண்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். எனது மகனை நீ எப்படி செருப்பு போட்டுக் கொண்டு செல்லலாம்? எனக்கூறி அடித்துள்ளனர். பள்ளிக்கு அந்த வழியாக தான் செல்ல வேண்டும். எனது மகன் மட்டுமின்றி நிறைய மாணவர்களை அவர்கள் அடித்துள்ளனர்.
இரண்டாவது முறையாக எனது மகனை இவர்கள் தாக்கியுள்ளனர். தற்போது சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எங்களுக்கு இதுவரையில் சுதந்திரம் கிடைக்கவில்லை. எனது மகனுக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. எனவே, எனது மகன் மீது சாதி ரீதியாக தாக்குதல் நடத்திய பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனுக்கு மட்டுமின்றி எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் இந்த நிலைமை உள்ளது" என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.