விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறையில், சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. இந்த நிலையில், இன்று வழக்கம் போல் பட்டாசு ரசாயன மூலப்பொருள் கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணி செய்து கொண்டிருந்த அறை தரைமட்டமானது. மேலும், பணியில் இருந்த குருமூர்த்தி பாண்டியன் (19) என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் சாத்தூர் அருகே குகன் பாறையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு#virudhunagar #Sattur #gukanparai #FireAccident #firecrackers #ETVBharatTamilnadu pic.twitter.com/UZziR54HW6
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 19, 2024
மேலும், ரசாயன பொருட்களை இறக்கி வைக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் (24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், இந்தச் சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளர் பாலமுருகன், போர் மேன் காபில் ராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.