திண்டுக்கல்: காசம்பட்டி வீரக்கோவில் பகுதியை இரண்டாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் பொன்முடி, கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியை இழந்து நிற்கிறார். தொடர்ந்து அவரது அமைச்சர் பதவியும் போகப்போகிறது என தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி வீரக்கோவில் பகுதியில் உள்ள 4.97 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தை தமிழகத்தின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்தது. மதுரையில் அரிட்டாபட்டிக்கு பிறகு, காசம்பட்டி பகுதி இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காசம்பட்டி பகுதிகள் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டதற்கு, அப்பகுதி மக்கள் “ நாங்கள் கடந்த 800 வருடமாக பாதுகாத்து வரும் வீரக்கோவில் பகுதியை பொதுமக்களே பாதுகாத்து கொள்கின்றோம். அரசின் இந்த உத்தரவு தங்களுக்கு தேவையில்லை” எனக்கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்ரல் 15) நத்தம் பேருந்து நிலையம் முன்பாக தமிழர் தேசம் கட்சி சார்பில், பொதுமக்கள் இணைந்து, அரசின் பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், ஊர் மக்களிடம் கருத்துகளை கேட்காமல் அறிவிப்பு செய்தது ஏன்? எனக்கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், இந்த திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் பேசுகையில், “ காசம்பட்டி மக்கள் கோயிலை பாதுகாக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அடுத்து அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும். அடுத்தது எங்களின் ஆர்ப்பாட்டத்தின் வடிவம் மாறும். அரசாணை அறிவித்தது அறிவித்ததுதான் என்று கூறினால் திமுக ஆட்சி கலையும். மீண்டும் வர முடியாது." என்று காட்ட்மாக பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.