திருச்சி: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் பூமி பூஜைக்கு வந்த எம்.எல்.ஏ வை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளை முன் வைத்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மேல வெள்ளூர் கிராமத்திற்கு தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் வருகை தந்தார். பூமி பூஜை முடிந்த பிறகு அந்த கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனை முற்றுகையிட்டு சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"அப்போது எங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தின் போது ஓட்டு கேட்டு வந்தீங்க... அதன் பிறகு இப்போது தான் வர்றீங்க... ஓட்டு கேட்டு வந்தப்ப கிராம சாலையை போட்டு தருவதாக உறுதி தந்தீங்க... அதுக்கு பின்னர் இப்போ தான் இங்கு வந்து இருக்கீங்க..." என பொதுமக்கள் ஆவேசமாக பேசினர். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், அந்த ரோடுக்கான பூமி பூஜை போடத் தான் வந்துள்ளேன் எனக் கூறினார்.
அப்போது பொது மக்கள் எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் தெரு விளக்குகள் இல்லை, எங்கள் ஊரில் சுகாதார வளாகம் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அதற்கு தண்ணீர் வசதியும், மின்சார வசதியும் செய்து தரப்படாமல் உள்ளது. இதனால் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளாகியும் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் எங்கள் ஊர் காவிரிக்கு அருகே இருந்தும் தினசரி குடிநீர் வருவது இல்லை என பொது மக்கள் அடுக்கு அடுக்காக குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த கிராமத்திற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.