நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65% சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்குள்ள வனங்களில் அரிய வகை பறவைகள் மற்றும் யானை, மான், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு எருமை போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதி வறண்டுள்ளது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
மேலும் நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தேக்க தொட்டிகளில் வன விலங்குகள் குடிநீர் பருகுவதற்காக அவ்வப்போது தண்ணீர் நிரப்பி வருகின்றனர். ஆனாலும் மாவட்டத்தில் வனப் பகுதியில் புல்வெளிகள், தாவரங்கள் காய்ந்து கருகி உள்ளதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன.
இதன் காரணமாக மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நிலையில், உதகை அடுத்த குளிச்சோலை குடியிருப்பு பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தைகள் உலா வருவது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதற்கிடையே இந்த வைரல் வீடியோ பதிவு அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகளை வனத் துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த மாதம் உதகையில் சிறுத்தையால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் இறந்தார். அதன் பின்னர் அந்த பெண் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டர்.
இதையும் படிங்க: ''விடுதிக்குள் காதலி வரணும்" - செம பிளான் போட்டும் சொதப்பல்; வசமாக சிக்கிய மாணவர்!
இதேப் போன்று இந்த பகுதிகளில் உயிரிழப்பு ஏற்படும் முன்பு வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை ஆகியவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என்று வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இரவு நேரங்களில் பொது மக்கள் தனியாக செல்ல வேண்டாம் என்றும், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை கண்டால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்