தருமபுரி: ஒகேனக்கலுக்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனையில், தமிழ் புத்தாண்டையொட்டி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு இன்று (ஏப்ரல் 14) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ராம் நகர் பகுதியில் சேர்ந்த முத்தப்பா மற்றும் பெங்களூர் சார்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் சின்னப்பா ஆகியோர் குடும்பத்தினருடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தனர்.
அங்கு, ஒகேனக்கல் பகுதியில் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு, ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி காவிரி ஆற்று பகுதியில் குடும்பத்துடன் குளித்தனர். அப்போது முத்தப்பா மகள் பாக்கியலட்சுமி (10), சின்னப்பா மகள் காவியா (16) ஆகிய இருவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இருவருக்கும் நீச்சல் தெரியாமல் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆற்றில் மூழ்கிய சிறுமிகளை தேடியுள்ளனர். ஆனால், சிறுமிகள் கிடைக்காததால் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர் ஆற்றில் மூழ்கிய சிறுமிகளை சடலமாக மீட்டனர்.
இதில், சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பிறகு எதிபாராத விதமாக இரண்டு சிறுமிகளையும் சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இச்சம்பவம் குறித்து பென்னாகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போது தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது நீர்வரத்து குறைவான சமயங்களில் தான் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையும், தீயணைப்பு துறையும் ஆங்காங்கு ஒலிபெருக்கி மூலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இத்தகைய உயிரிழப்புகளை குறைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்