மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பெய்த கனமழை காரணமாக நேரடி விதைப்பு செய்யப்பட்ட மற்றும் இயந்திர நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதுபோன்று மழையால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். இயந்திர நடவுக்காக தயார் செய்யப்பட்ட பாய் நாற்றங்கால்கள், நடவு செய்யப்பட்டு ஒரு வார காலமே ஆகியுள்ளது. மேலும், பல விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இதற்கிடையில், மயிலாடுதுறையில் கடந்த 4 நாட்களாக சீரான அளவு கோடை மழை பெய்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (மே 19) இரவு கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் நேரடி விதைப்பு, இயந்திர நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் பாய் நாற்றங்கால்கள் நீரால் சூழப்பட்டு சேதம் அடைந்துள்ளது.
இதையும் படிங்க: அரையடி சந்தில் சிக்கிக்கொண்ட மூதாட்டி... 3 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்!! |
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், செம்பனார்கோவிலில் அதிகபட்சமாக 74.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாகவே வயலில் நீர் தேங்கி இருந்த நிலையில், நேற்று பெய்த மழையால் வளரும் இளம் நெற்பயிர்கள் முழுவதுமாக நீரால் சூழப்பட்டு சேதம் அடைந்துள்ளது.

தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்யும் சூழல் நிலவுவதால், பயிர்கள் முற்றிலும் அழுகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், வாய்க்கால் தூர்வாரும் பணிகளும் மந்தமாக நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சம்பா, தாளடி சாகுபடி மழையால் பாதிக்கப்பட்ட போது, இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணமும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறை சார்பில் சேதமுற்ற பயிர்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.