சென்னை: யானை சின்னத்தை விஜய் கட்சி கொடியில் பயன்படுத்துவது போல உதயசூரியன், அண்ணா போன்ற படங்களை மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? என பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் இன்று பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில், பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல என்றும் தமிழகத்தின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தங்களுடைய சின்னமான யானையை தவெக கட்சி கொடியில் பயன்படுத்துவதை போல உதயசூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.
மேலும், தங்களுடைய தேசிய சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது எனவும் வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் இது குறித்து
தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.