''எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பாருங்கள்” - ஓ. பன்னீர்செல்வம்!
சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் என அனைவரும் ஒன்றாக சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Published : September 15, 2025 at 10:00 PM IST
சென்னை: அதிமுக-வை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், செங்கோட்டையனிடம் தான் தினமும் பேசி ஆலோசனை நடத்தி வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், “அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இதை உறுதிமொழியாக ஏற்போம். பிரிந்து கிடக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே, எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் நல்லாட்சி தமிழ்நாட்டில் மலரும். இதைத் தான் மக்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தொண்டர்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து பிரிந்துள்ள அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்ணாவின் பிறந்த நாளில் சபதம் ஏற்போம், வெற்றி பெறுவோம். அதிமுக இயக்கம் எந்த வழியில் சென்றால் நல்ல வழியாக இருக்கும் என்று கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி நம்மிடம் தந்துள்ளனர். அக்கழக சட்ட விதியின் படியே இரு பெரும் தலைவர்களும் கட்சியை வழிநடத்தினார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை உண்மையாக்கும் வகையில் தற்போதுள்ள அதிமுகவின் சட்ட விதிகள் இல்லை. சாதாரண தொண்டன் கூட கழகத்தின் பொதுச்செயலாளராக வரலாம் என்ற சட்ட விதி இருந்தது. அந்த விதியை இன்று காற்றிலே பறக்க விட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு முடிந்து அதன் அடிப்படையில் கழகம் ஒன்றிணைய வேண்டும்.
பிரிந்து சென்ற தலைவர்கள் இணையவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து இந்த இயக்கத்தை காப்பாற்றுவார்கள். செங்கோட்டையனிடம் நான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அவரும் என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்.
சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோருடன் சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், நயினார் நாகேந்திரனிடம் நான் பேசியுள்ளேன். அவர் என்னை சந்திப்பதாக கூறியுள்ளார். நேரம் ஒத்து வந்தால் சந்திப்போம். அரசியல் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்,” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் கட்டத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும், பின்னர் அதிலிருந்து விலகுவதும், சொந்த கட்சிகளில் இருந்து வேறு கட்சிகளுக்கு தாவுவதுமான சம்பவங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

