சென்னை: நெல்லையில் முன்னாள் போலீஸ் எஸ்ஐ ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது,"என உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கொல்லப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறி கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஜாகிர் உசேன் உயிரோடு இருந்த போது தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில் ஜாகிர் உசேன் கூறும் போது, ''எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று கூறியிருந்தார்.

சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்: இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "நெல்லையில் ஜாகிர் உசேன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்கூட்டியே ஜாகிர் உசேன் புகார் கொடுத்தும் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் உறுதி: இதனைத் தொடர்ந்து இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "முக்கியத்துவம் தந்து இந்த பிரச்னை சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஜாகிர் உசேனுக்கும் கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபீக்க்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது தெரியவந்துள்ளது. ஜாகிர் உசேன் மீது கிருஷ்ணமூர்த்தியும், கிருஷ்ண மூர்த்தியின் மீது ஜாகிர் உசேனும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஜாகிர் உசேனுக்கு கொலை மிரட்டல் இருந்தது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜாகிர் உசேன் கொல்லப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு அனைவரும் பாரபட்சம் இன்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதை இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது," என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.