ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறிகள் மற்றும் பழங்கள் மொத்த விற்பனை நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 28) அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 டன் வாழைத்தார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது கோடைகாலம் தொடங்கியிருப்பதால் பழங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு சந்தைகளில் விற்கப்படும் தர்பூசணி, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்கள் ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறிகள் மற்றும் பழங்கள் மொத்த விற்பனை சந்தையில் இன்று (மார்ச்28) அதிகாலையிலேயே உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சந்தையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில், விவசாய பயிர்களுக்கு தெளிக்கப்படும் ரிஃபோன் எனப்படும் ரசாயன மருந்தை, வாழைத்தர்களுக்கு ஸ்பிரேயர் மூலமாக தெளிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு கடைகளில் இருந்து ரசாயனம் தெளிக்கப்பட்ட ஒரு டன் எடை கொண்ட வாழைத்தார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்! மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! |
தொடர்ந்து பழங்கள் விற்பனை நிலையத்தில், ஒவ்வொரு கடையிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழம், ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட அனைத்து பழங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், ரசாயனங்கள் தெளிக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் மற்றூம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சோதனை செய்தோம். இதில், ரிஃபோன் எனப்படும் ரசாயன மருந்தை பயன்படுத்துகின்றனர். இதனை நேரடியாக பழங்கள் மீது பயன்படுத்தக்கூடாது. ஆனால், விவசாயிகள் இது தெரியாமல் நேரடியாக பழங்கள் மீது ஸ்பிரே செய்வதால், இதிலிருந்து எத்திலீன் வாயு வெளியேறுகிறது.
இவை பழங்களை பழுக்க வைக்க உதவுகிறது. இவ்வாறு ரசாயனம் கலந்த உணவை சாப்பிடுவதால் தோல் நோய், வாந்தி, வயிறு பிரச்சனைகள் ஏற்படும். வைக்கோல் வைத்து இயற்கையாக பழங்களை பழுக்க வைக்க வேண்டும் அல்லது எத்திலீன் பவுச் மூலமாக பழுக்க வைக்கலாம். இருப்பினும் நேரடியாக பழங்கள் மீது தெளிக்கக்கூடாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்