திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன், தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர், டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். கடந்த மார்ச் 18 ஆம் தேதி அதிகாலை பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியபோது அவரை 3 பேர் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், தொட்டிப்பாலம் தெருவில் உள்ள ஒரு இடம் தொடர்பான பிரச்சினையில் ஜாகீர் உசேன் பிஜிலியை அதேப் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் இதுவரையிலும் கிருஷ்ணமூர்த்தி (எ) தவ்பிக், அவரது உறவினர்களான கார்த்திக், அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் நீதிமன்றத்தில் சில காலங்கள் பணியாற்றியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துவிட்டன” - எம்பி கார்த்தி சிதம்பரம்
எனவே அவருக்கு யார் அடைக்கலம் கொடுத்துள்ளார்கள்? என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலியின் மகன் இச்சூர் ரகுமான் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புதிதாக ஒரு வீடியோ வெளியிட்டார்.
இதன் எதிரொலியாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் இச்சூர் ரகுமான் வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தலைமறைவாக உள்ள நூர்நிஷா எங்கு பதுங்கி உள்ளார்? என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்திட திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் அவரது மற்றொரு சகோதரர் பீர் முகமது என்பவரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
அப்போது பீர் முகமதுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவரை இன்று டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதன் மூலம் இவ்வழக்கல் இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.