திருநெல்வேலி: சாலை ஓரத்தில் இருந்த கிணற்றுக்குள் ஆம்னி வேன் விழுந்து கவிழ்ந்ததில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மோசஸ், வசந்தா, ரவி, ஒன்றரை வயது குழந்தையான ஸ்டாலின் ஹெத்சியா கிருபா, சைனி கிருபாகரன், ஜெனிட்டா எஸ்தர் ஹெர்சோம் ஆகியோர் கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டைக்காக இன்று அவர்களது சொந்த ஆம்னி வேனில் வந்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணிக்கும் மீரான்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று மாலை ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ஆம்னி வேன் கிணற்றுக்குள் மூழ்கியது. அந்த வேனில் இருந்த சைனி கிருபாகரன், ஜெனிட்டா, எஸ்தர் ஹெர்சோம் ஆகிய மூவரும் வெளியே தப்பி வந்துள்ளனர். மேலும் இந்த வாகனத்தில் வந்த மோசஸ், வசந்தா, ரவி, ஒன்றரை வயது குழந்தையான ஸ்டாலின் ஹெத்சியா கிருபா ஆகிய ஐந்து பேரும் உள்ளே தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டனர்.
தப்பி வந்த மூவரும் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், ஸ்கூபா வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் அந்த கிணற்றுக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.எனினும் கிணற்றில் வேனுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்க முடியவில்லை.
இதையும் படிங்க: டைடல் பார்க் அருகே சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் 5 பேருடன் சிக்கிய கார் - மெட்ரோ ரயில் பணிகள் காரணமா?
பின்னர் ஜேசிபி இயந்திர வரவழைக்கப்பட்டு மீட்பதற்கான பணிகள் நடந்தது. இரவு நேரம் ஆகிவிட்டதால் அங்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து மும்மரமாக கிணற்றுக்குள் மூழ்கி தவிப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வசந்தா, மோசஸ், ரவி கோவில் பிச்சை, கெஞ்சி அல்கிருபா மற்றும் ஒன்றரை வயது குழந்தையான ஷாலினியன் ஆகிய ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் உயர் அதிகாரிகள் மீட்பு பணியை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். தீயணைப்புத்துறையில் உள்ள ஸ்கூபா வீரர்கள் வேனில் கயிறு கட்டினர். இதன் மூலம் வேன் எளிதில் மேலே கொண்டுவரப்பட்டது. மீட்புப்பணியில் ஈடுபட்ட ஸ்கூபா வீரர்கள் மற்றும் தீயணைப்பு துறையினரின் பணியை பாராட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரூ.5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.