சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை நீண்ட காலத்துக்கு பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டுடியோ அருகில், நீர் நிலை புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டடம் கட்டி வசித்து வந்த செல்வி என்பவரை காலி செய்ய மயிலாப்பூர் வட்டாட்சியர் கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பினார். நீண்ட காலமாக வசித்து வருவதால் இந்த நோட்டீஸை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமி நாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஆக்கிரமிப்பாளரான மனுதாருக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு குடும்ப உறுப்பினர்கள் பயோ மெட்ரிக் பதிவுகளை வழங்கி இடத்தை காலி செய்தால் உடனடியாக புதிய வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சுவாமி நாதன், லட்சுமி நாரயணன் ஆகியோர், நீண்ட காலமாக வசிக்கிறார்கள் என்பதற்காக நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது. மனுதாரரை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றும், காலி செய்த பின் எதிர் காலத்தில் வேறு எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அதிகாரிகளின் இந்த செயலற்ற தன்மையை நீண்ட காலத்துக்கு பொறுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி, செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.