திருநெல்வேலி: நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துறை மீது மீண்டும் தாக்குதல் நடந்த விவகாரத்தில், இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருவதாகவும் திருநெல்வேலி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய சரகம், கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதியில் வைத்து ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 7 மணியளவில், சின்னத்துரை தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவரை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கி, அவரது செல்போனைப் பறித்து சென்றதாக சின்னத்துரை புகாரளித்தார். அதன் பேரில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், இன்ஸ்டாகிராம் மூலம் சின்னத்துரையிடம் நண்பராக பழகிய பரமேஸ் (20) என்பவரது தலைமையிலான நண்பர்கள் சங்கரநாராயணன்(23), சக்திவேல்(18), சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகியோர், அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு வரவழைத்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின்னர், இதுதொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சக்திவேல் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் காவல் நிலையத்தில், ஏற்கனவே இரண்டு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது, தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ''3 ஆண்டு லிவிங் டுகெதர்.. ரூ.7 லட்சம் பணம், நகை பறிப்பு'': பிரபல நடிகரை தட்டித் தூக்கிய நடிகை! |
கடந்த 2023ஆம் ஆண்டு நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவர் மீது, சக மாணவர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, சின்னத்துரைக்கு மட்டுமின்றி, தடுக்கச் சென்ற அவரது தங்கைக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நண்பரை சந்திக்கச் சென்ற சின்னத்துறை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், அந்த தாக்குதலில் பெரிதளவில் காயம் ஏற்படவில்லை எனவும், முன்பு நடத்த சம்பவத்திற்கும் இதற்கு எந்த சம்மந்தமும் கிடையாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சின்னத்துறையிடம் நண்பர்கள் போலப் பேசி, திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டும் எனவும், அதனால் நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கூறி தொலைபேசியில் அழைத்து, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாகவும், தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்தார். இந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.