திருநெல்வேலி: பாஜக கூட்டணிக்கு வரும் பெரிய கட்சி என்னவென்று? உடனடியாக இப்போதே சொல்ல முடியாது. அதிகமான கட்சிகள் பாஜகவின் கூட்டணிக்கு வருவார்கள் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லையில் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் மூலதன கணக்கில் கனிசமான முறையில் நிதி அறிவித்துள்ளார். நாடு முன்னேற வேண்டும் என்றால் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். நாட்டின் மேம்பாட்டிற்கு உட்கட்டமைப்பு வசதியை உயர்த்த வேண்டும். எனவே தான் நாடு முழுவதும் 85-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள், 400-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், பல லட்சம் கோடி செலவில் ரயில் நிலைய சாலை போன்றவை 11 ஆண்டுகால ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளன'' என தெரிவித்தார்.
மேலும் பேசிய நயினார் நாகேந்திரன், ''பெஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்திய பயங்கரவாதத்திற்கு சிந்தூர் ஆபரேஷன் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெருமையை உலகலவில் உயர்த்தி பாதுகாப்பிற்கு பெரும் உதவியை பிரதமர் செய்துள்ளார். 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு விவசாயத்திற்கு செலவு செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தில் 14 வது இடத்தில் இருந்த இந்தியாவை 4 வது இடத்திற்கு பிரதமர் கொண்டு வந்துள்ளார். ஒரு பைசா பாக்கியில்லாமல் ஜிஎஸ்டி தொகையை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழை உலகம் முழுவதும் பிரதமர் கொண்டு சென்று வருகிறார்'' என்றார்.
இதையும் படிங்க: “தவெக விஜய் பாஜக கூட்டணியில் இணைய அமித் ஷாவிற்கு ஆசை” - திருமாவளவன் கிண்டல்!
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், ''வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும். அதுவும் இ.பி.எஸ் தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்'' என தெரிவித்தார்.
மேலும், '' கீழடியில் தொழில்நுட்ப உதவி இல்லை என தமிழ்க அரசு சொல்கிறது. நேரடியாக கீழடியில் ஆய்வு நடத்தி உதவி தேவைப்பட்டால் உடனடியாக மத்திய அரசை வலியுறுத்துவேன். பிரதமர் உலகம் முழுவதும் தமிழை பரப்பி அதற்கான அனைத்து மரியாதையையும் செய்து வருகிறார். பாஜக கூட்டணிக்கு வரும் பெரிய கட்சி என்னவென்று? உடனடியாக இப்போதே சொல்ல முடியாது. அதிகமான கட்சிகள் பாஜகவின் கூட்டணிக்கு வருவார்கள். எந்தெந்த கட்சிகள் என்பதை உடனடியாக சொல்ல முடியாது. திமுக தனியாக தேர்தலில் போட்டியிட தயாரா? திமுக பலமான கட்சி என்றால் அவர்கள் தனியாக நிற்கட்டும். பாஜக பலமில்லாத கட்சி இல்லை என்பதை சொல்லும் திமுக தைரியமாக தனியாக நிற்கட்டும். திமுக கூட்டணி பிரச்சனையை பொறுத்திருந்து பார்ப்போம்'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்