சென்னை: தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு 'அவுட் ஆப் கண்ட்ரோல்' என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒருவரையொருவர் தாக்கி அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சுகள் அனல் பறந்து வருகின்றன. குறிப்பாக, திமுக - பாஜக தலைவர்கள் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூரில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "டெல்லியின் ஆளுகைக்கு என்றுமே தமிழ்நாடு அடிபணியாது என்றும், தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான் எனவும் பேசினார். மேலும், அமித் ஷா அல்ல எந்த ஷா நினைத்தாலும், தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது." என்றும் முதலமைச்சர் காட்டமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்தி, அவர்களை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கியே தீருவோம் என்ற உறுதியோடு பாஜக - அதிமுக இணைந்ததில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரச்சம் தொற்றிக் கொண்டது போல தெரிகிறது.
இதையும் படிங்க: ஆளுநர் எங்களுக்கு தபால்காரர் தான்.. ரொம்ப உதவியும் பண்றாரு... மு.க. ஸ்டாலின் நறுக்! |
நம் கூட்டணிக்கு பெருகும் மக்கள் ஆதரவை கண்கூடாக பார்க்க முடிவதால், இந்த விஷயத்தில் திமுகவின் பயமும், பதற்றமும் நியாயமானதுதான். ஆகவேதான், முதலமைச்சர் ஸ்டாலின் மேடைக்கு மேடை நம் வலிமை மிகுந்த கூட்டணியை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில், முதலமைச்சரிடம் இருந்து தமிழகம்தான் out of control-இல் உள்ளது. சட்டம்-ஒழுங்கு, போதை கலாச்சாரம், ஊழல், சாதிய மோதல்கள், சமூக சீர்கேடு, விலைவாசியால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் அமைச்சர்கள் என தமிழகததில் out of control-இல் நடக்கும் விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆக, இத்தனை விஷயங்கள் முதல்வரின் out of control-இல் இருக்கும்போது, தமிழகம் டெல்லிக்கு out of control என்று அவர் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், நம் வெற்றிக் கூட்டணி குறித்து முதல்வர் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை நாம் வீழ்த்தியே தீருவோம் என தனது பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
முதல்வருக்கு அழகல்ல: முன்னதாக, திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம்,ஆளுநரை தபால்காரர் என முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம். அப்படிப்பட்ட ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது முதலமைச்சருக்கு அழகல்ல" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.