சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சென்னை பயணத்தை நிறைவு செய்து விட்டு காரில் இன்று (ஏப்ரல் 11) இரவு 7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வழியனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர், தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு நான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நாளை தான் இறுதி முடிவு வெளியிடப்படும். அதன்பின்பு எங்கள் தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு நான் உங்களை சந்தித்து உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதது பற்றி நான் எதுவும் கூறுவதற்கு இல்லை. பாஜக, அதிமுக கூட்டணி குறித்து கனிமொழி கூறி இருக்கும் கருத்து குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் எதிர்க்கட்சிக்காரர்கள் அவ்வாறு எதிராக தான் பேசுவார்கள். எங்கள் கட்சிக்காரர்கள் யாராவது எதிராக பேசி இருக்கிறார்களா? கனிமொழி பேசியதற்கு நான் எப்படி கருத்து கூற முடியும்? எங்கள் கட்சியில் யாராவது கூட்டணியை எதிர்த்து பேசி இருந்தால் அதற்கு நான் தகுந்த பதில் கூறுவேன்.
இதையும் படிங்க: ''ஜெயலலிதாவை விமர்சித்தவர்களுக்கு விருந்து'' - எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய கனிமொழி!
அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதும் பிரிவதும் சகஜம். இது இன்று, நேற்று நடப்பது இல்லை. ஒரு காரணத்திற்காக அவர்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து இருக்கலாம். இன்னொரு காரணத்திற்காக இன்று மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் கூட்டணியில் சேர்ந்து இருக்கின்றனர். இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது.
இந்த இடைவெளியில் பல மாற்றங்கள் ஏற்படும். புயல் அடிக்கலாம். கடும் மழை பெய்யலாம். இப்போது வெயில் அடிக்கிறது. அதைப்போல் நல்ல ஒரு பருவ சூழ்நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு பாஜக நிர்வாகம் எப்படி இருக்கிறது? என்பதை பத்திரிகையாளர்கள் தான் பார்த்து, எனக்கு சொல்ல வேண்டும். நானே கட்சியை நன்றாக நடத்துகிறேன் என்று எனக்கு நானே வாழ்த்து சொல்வது நன்றாக இருக்காது.
வேட்பு மனுவில் கையெழுத்து போடுவதற்கு அண்ணாமலை தான் எனக்கு பேனா கொடுத்தார். எனது கையை பிடித்து வாழ்த்து சொன்னார். இது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. அவருடைய காலத்தில் தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றது. அதை யாரும் மறுக்க முடியாது. இனிமேலும் அவருடைய உதவியுடன் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
நான் நாளை மாலை 5 மணிக்கு மேல் தான் மாநில பாஜகவுக்கு தலைவர் ஆகப் போகிறேன். ஆனால் அண்ணாமலைக்கு அகில இந்திய அளவில் கட்சி பொறுப்பு கொடுக்கப்படும். அதை அகில இந்திய கட்சி தலைமை முடிவு செய்யும். 1998 இல் ஜெயலலிதா முதன்முதலாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மிகப்பெரிய பெரும்பான்மை பலம் பெற்றார். அதைப்போல் இப்போது அதிமுக பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. கைகோர்த்து உள்ளது. எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.'' என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்