சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழக முதலமைட்டர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வரால், தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்ல முடியவில்லையா? என அவர் வினவியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றதில் இருந்தே அதிரடியாக பேசி வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்த நயினார், திமுக ஆட்சியை வேரறுக்க போகும் இந்தக் கூட்டணியால் முதல்வர் கண்ணில் மரண பயம் தெரிவதாக நேற்று கூறியிருந்தார். மேலும், இன்னும் ஒரு வருடம்தான் உள்ளது. அதுவரை ஆடுங்கள் எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் சாட்டையை சுழற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதல்வர் ஸ்டாலின், நண்பகல் கடந்தும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறாமல் புறக்கணித்து வருகிறார்.
மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் நிறுவனமான ஆவினில் பால் பாக்கெட்டுகளில் கூட புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை. ஆங்கில புத்தாண்டுக்கு அகிலத்திற்கே வாழ்த்து மடல் எழுதும் முதல்வருக்கு, தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூற மனமில்லையா?
தமிழுக்காக உயிரை கொடுக்கும் கழகம் திமுக என விளம்பர வசனம் பேசிக் கொண்டு, நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் ஸ்டாலின், சித்திரை 1இல் மவுன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல். தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுகவுக்கு, வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்.
