சென்னை: காவல்துறையின் தடையை மீறி பீக் அவர்ஸில் சென்னைக்குள் நுழைந்த 207 லாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர், தாயுடன் இருசக்கர வானகத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி, தண்ணீர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளரை பணியிட நீக்கம் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதேபோல, போக்குவரத்து உதவி ஆணையர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பீக் அவர்ஸில் நுழைந்தால் கடும் நடவடிக்கை:
அதனைத் தொடர்ந்து, சென்னையில் பீக் அவர்ஸ் என கூறப்படும் நேரங்களில், தண்ணீர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நுழைய போலீசார் தடை விதித்தனர். ஏற்கனவே, காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நகருக்குள் கனரக வாகனங்களை வருவதை போக்குவரத்து போலீசார் உன்னிப்பாக கவனித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அறிவுறுத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 20) பீக் அவர்ஸில் கனரக வாகனங்கள் ஏதாவது நகருக்குள் வருகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறைகளை மீறியதாக 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக லாரிகள் என 207 லாரிகள் மீது அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், தடையை மீறி நகருக்குள் நுழைதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, இனி பீக் அவர்ஸில் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துணை நடிகை மீது மோசடி புகார்:
சென்னையைச் சேர்ந்த ஹரிஷ் (27) என்ற நபர் டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “தனது நண்பர்கள் மூலம் பழக்கமான துணை நடிகை அனாமிகா, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். தற்போது பண பிரச்சனைகள் உள்ளது. அதை தீர்த்தால் மட்டுமே நாம் திருமணம் செய்து கொள்ள முடியும் எனக் கூறி, என்னிடமிருந்து சிறுக சிறுக ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்தும், தன்னிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்து வந்தார். அவர் கேட்ட பணத்தை என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால், என்னை விட்டுவிட்டு வேறு ஒரு நபரிடம் பேசி வந்தார். இதுதொடர்பாக அனாமிகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னை பற்றி காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து மிரட்டி வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சென்னை மாங்காடு காவல் நிலையத்தில், அனாமிகா தன்மீது பொய் புகார் அளித்ததார். தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் காண்பித்து, அந்த புகார் பொய் என்பதை உறுதி செய்தேன். எனவே, அனாமிகாவிடம் இருந்து தனது பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

லிங்க் அனுப்பி பண மோசடி:
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது செல்போன் எண்ணிற்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக போக்குவரத்து காவல்துறை அனுப்பும் குறுந்தகவல் போன்ற மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து என்ன அபராதம் என பார்க்க முயன்ற போது, செல்போன் ஹேங் ஆகியுள்ளது. பின்னர், அந்த செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்து பார்த்த போது, ஓடிபி ஒன்று வந்துள்ளது. அதனி பின்னர், வங்கிக் கணக்கிலிருந்து 12,600 ரூபாய் திருடப்பட்டுள்ளது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், இது குறித்து சைபர் கிரைம் மோசடி எண் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். மேலும், நேற்று மோசடி சம்பத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி பெரும்பாக்கம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.