தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரையில் 200 க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கடற்கரை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மணப்பாடு கடற்கரை பகுதியில் கடல்வாழ் உயிரினமான கடல் ஆமைகள் வனத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வருடம் தோறும் கடலில் வாழும் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் மணப்பாடு கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறிப்பது வழக்கம்.
ஆமைகளின் முட்டைகளை உரிய முறையில் பராமரித்து அவை குஞ்சுகளாக வெளியே வரும் போது அவற்றை வனத்துறையினர் கடலில் விடுவார்கள். இந்த ஆண்டு கடல் ஆமைகள் மணப்பாடு கடற்கரைப் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டிருந்தன. அந்த முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். முட்டையில் இருந்து வெளியே வந்த 200க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை முதல் கட்டமாக வனத்துறையினர் கடலில் விடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதையும் படிங்க: குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதா? அதிமுகவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்த திமுக கூட்டணி கவுன்சிலர்கள்!
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்றார். அவருடன் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கடல் ஆமைகள் மூட்டைகள் பொறிக்கும் இடங்களை பார்வையிட்டனர். மேலும் ஆமை குஞ்சுகளை ஆர்வத்துடன் கண்டனர். அப்போது மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், ஆமைகள் குறித்தும் ஆமை குஞ்சுகள் குறித்தும் அதன் வாழ்வியல் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறினார். பின்னர், கடற்கரையில் பொறிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. அரசு அதிகாரிகள், மாணவர்கள் உளிட்டோர் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.
கடற்கரை மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் ஆமை குஞ்சுகள் தங்களது காலால் மெதுவாக ஊர்ந்து சென்றதை அங்கிருந்தவர்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து கடல் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து வனத்துறையினர் எடுத்துக் கூறினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், "மணப்பாடு கடற்கரையில் முட்டையிட்டு குஞ்சு பொறித்த கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விழும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் மட்டும் ஆமைகள் 200க்கும் மேற்பட்ட முட்டைகளை பொறித்திருந்தன. அவற்றில் வெளி வந்த ஆமைக்குஞ்சுகள் வனத்துறையால் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன,"என்றார்.
மேலும் இந்த நிகழ்வு குறித்துப் பேசிய தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், "மணப்பாடு கடற்கரை பகுதியில் ஆலிவ் ரிட்லி என்ற வகை ஆமை மிகவும் சிறப்பு பெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து ஆமைகள் உயிரிழந்து வருவது தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,"என்று தெரிவித்தார்.