கோயம்புத்தூர்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு, மின் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
உண்ணாவிரத போராட்டம்:
இந்த நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் இன்று (ஏப்ரல் 11) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
23 ஆவது நாளாக தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ரூ.600 கோடி மதிப்பிவான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் அனைவரையும் அழைத்து, தொழிலாளர் நலத்துறை முன்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் போரட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்எல்ஏ ஈஸ்வரன், "விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஏழை மக்களை வாழவைக்கின்ற தொழில் விசைத்தறி. 2014 ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியை சூழல் கருதி குறைத்து வாங்கினார்கள். ஆனால், தற்போது மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பது 60 சதவீத கூலி உயர்வு. இது அதிகம் இல்லை.
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்:
இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் எழுதிக் கொடுத்துள்ளேன். அநேகமாக வருகின்ற செவ்வாய் அல்லது புதன்கிழமை போராட்டம் குறித்து கவனம் ஈர்ப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி தீர்மானம் வரும்போது பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசவுள்ளேன். விசைத்தறியாளர்களுடைய பிரச்சனையை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு கூலியை உயர்த்தி கொடுப்பதற்கு அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
சீனாவிற்கான வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில் இந்தியாவிற்கு அதிகமான ஆர்டர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கான ஆர்டர் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." என்று ஈஸ்வரன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்