சென்னை: மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை செம்மொழி நாளாகக் கொண்டாடுவோம் என திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை உத்தங்குடி பகுதியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் (ஜூ1) திமுக பொதுக்குழு கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கச்சத்தீவு மீட்பு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதியை, செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சமூகவலைதளத்தில், “தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த, முத்தமிழ் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து; இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் என பெருமை கொள்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயில்: " பச்சிளம் குழந்தைகளுக்கு பால்" - புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு! |
கருணாநிதியின் பிறந்த நாளான இன்று, அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் செம்மொழி விழாவில், கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
அதுமட்டுமின்றி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்களை வெளியிடுதல், வயது முதிர்ந்த 5 தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஆணை வழங்குதல், செம்மொழி நாளை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், தமிழ்நாடு அரசின் 4 ஆண்டு சாதனை மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.