சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ரூ.120 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வக கட்டடங்கள், பணிமனைகள், விடுதி கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 20) திறந்து வைத்தார்.
மேலும் ரூ.207 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களுக்கும், அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கட்டி முடிக்கப்பட்ட பணிகள்
சென்னை: ராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கி படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையினை உடனே ஏற்று விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் நவீன வசதிகளுடன் 455 மாணவியர் தங்கி படிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு பயிலும் மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, பெரம்பலூர்,தென்காசி புதுக்கோட்டை,ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய மாவட்டங்களில் உயர்கல்வித்துறையின் சார்பில் கட்டடப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள்
மேலும் சென்னையில் சென்னை மைய தெழில்நுட்ப வளாகத்தில் மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்.
சென்னை, குரோம்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 31 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்; சென்னை, தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டட தொகுதி;
சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் 2 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; சென்னை ராணி மேரி கல்லூரியில் 2 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் மாவட்டங்களில் உயர் கல்வித்துறையின் சார்பில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.