சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளை கொண்ட இந்த தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் https://upsc.gov.in/ என்கிற இணையதளத்தில் தேர்வு முடிவை பார்க்கலாம். இந்நிலையில் இந்த தேர்வு எழுதியவர்களில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சக்தி துபே அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் 2 ஆவது இடம் மற்றும் டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 23 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் படித்தவர். இதேபோல் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா அகில இந்திய அளவில் 39 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 மாணவர்கள் யுபிஎஸ்சி நேர்முக தேர்வுக்கு சென்றதில் 50 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 50 மாணவர்களில் 18 பேர் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களில் காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய இருவரும் தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு தரவரிசையில் முதல்வன் ஆகியிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குரல் கேட்டு ஓடி வரும் 204 மயில்கள்! தாத்தாவுக்கு தந்த சத்தியத்தை நிறைவேற்றும் பேரன்!
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், '' எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல. தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் துவக்கி வைத்த 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு தரவரிசையில் முதல்வன் ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்த திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்கிற நம்பிக்கை என் மகிழ்ச்சி ஆகியுள்ளது." என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்