கள்ளக்குறிச்சி: மிகவும் புகழ்பெற்ற 'மிஸ் கூவாகம்' அழகிப் போட்டி கள்ளக்குறிச்சி கூத்தாண்டவர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தேவதைகளை போல திருநங்கைகள் வந்து 'ரேம்ப் வாக்' நடந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்றது கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா. கூவாகம் திருவிழாவின் ஒரு பகுதியாக, அங்கு ஆண்டுதோறும் 'மிஸ் திருநங்கை' போட்டி நடைபெறுவது வழக்கம். திருநங்கைகள் கலந்து கொள்ளும் இந்த அழகி போட்டியை காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில், நேற்று மிஸ் கூவாகம்' அழகிப் போட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. மிஸ் திருநங்கை 2025 போட்டியில் வெற்றி பெறுவதற்காக, பல பகுதிகளில் இருந்து வந்த திருநங்கைகள், பல வகை ஆடைகளை அணிந்து வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாநிலத்தின் முதல் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை செல்வி கோபிகாவின் பாடலுடன் ஆரவாரமாக தொடங்கியது. கோபிகாவின் ‘ராசாவே உன்ன காணாத நெஞ்சு’ என்ற சினிமா பாடலைக் கேட்ட அனைவரும் மெய்மறந்து போனர். அதனைத் தொடர்ந்து, பொன்னி மாஸ்டரின் நடனக் குழுவைச் சேர்ந்த திருநங்கைகள், பொதுமக்களை கவரும் வண்ணம் பரதநாட்டியத்தை அரங்கேற்றினர். பின்னர், ஆடல் பாடல் எனக் கூத்தாண்டவர் கோயில் திருவிழா களைகட்டியது.
இதையும் படிங்க: ''காவல்துறை கெடுபிடி இல்லாமல் இருந்தால் பிழைக்கலாம்'' - காத்திருக்கும் கூவாகம் வியாபாரிகள்! |
அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டிற்கான மிஸ் திருநங்கையை தேர்வு செய்யும் ரேம்ப்வாக் நடைபெற்றது. அதில், மக்களின் உள்ளங்களைக் கவரும் வண்ணம், நடந்து வந்த திருநங்கைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் 15 நபர்களும், இரண்டாவது சுற்றில் 7 நபர்களும், இறுதியாக மூன்று நபர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். அதில் தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி முதல் பரிசையும், சென்னையைச் சேர்ந்த ஜென்யா இரண்டாம் பரிசு மற்றும் விபாஷா மோகன் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.