சென்னை: சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எதிர் வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்குதல் தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று மார்ச் (26) மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன் பிறகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "எதிர் வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கருதுகிறோம்.
20 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரம் கடந்த ஆண்டு தேவையாக இருந்தது. ஏப்ரல், மே மாதங்களுக்கு தேவையான மின்சாரத்திற்கு வெளிப்படைத் தன்மையோடு டெண்டர் கோரப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
ஆறாயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரம் இந்த கோடை காலத்திற்கு கூடுதலாக தேவை என கருதி ஒரு யூனிட் 8 ரூபாய் முதல் 9 ரூபாய் வரை கொள்முதல் செய்ய டெண்டர் மூலம் இறுதி செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப டெண்டர் கோரியுள்ளோம்.
25 சதவீதம் சொந்த உற்பத்தி, 50 சதவீதம் வெளியே கொள்முதல் செய்கிறோம். தேவையான இலக்கில் 50 சதவீதம் நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் நமது இலக்கு.
மேட்டூரை பொறுத்தவரை பணிகள் துவங்கியுள்ளது. தூத்துக்குடியை பொறுத்தவரை ஒரு வார காலத்தில் பணிகள் துவங்கவுள்ளோம்.
முன்னர் இருந்ததைவிட மின்சார தேவை அதிகரித்துள்ளது. மின் விநியோகம் தொடர்பான புகார்கள் இருப்பின் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கிறோம். வெயில் காலத்தில் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். பிரச்சனைகள் இருப்பின் அதனையும் கண்காணித்து சரி செய்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. 250 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க |
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலிப்பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மீட்டர், மின்மாற்றி, மின் கம்பம் என எதுவும் தட்டுபாடு இல்லை. ஏதேனும் ஒரு அலுவலகத்தில் தேவை இருப்பின் அருகிலுள்ள அலுவலகத்தில் எடுத்துக்கொள்ளலாம். பற்றாக்குறை என்பது இல்லை.'' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.