சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 2 ஆண்டுகளுக்குப் பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று சரண்டைந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. அவர் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பின்னர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத் துறையினர் தேடி வந்தனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று (ஏப்ரல் 09) சரண்டைந்தார்.
மேலும், அமலாக்கத் துறை பதிவு செய்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், எம்.கார்த்திகேயன், ஜி.கணேசன், எம். வெற்றிச் செல்வம், எஸ். அருண் ரவீந்திரா டேனியல், டி. ஆல்பிரட் தினகரன், எஸ் ஜெயராஜ் குமார், சி. பழனி, எஸ். லோகநாதன், டி. பிரபு, அனுராதா ரமேஷ் உள்ளிட்ட 12 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.
இதையடுத்து ஆஜரான அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க உத்தரவிட்ட நீதிபதி கார்த்திகேயன், விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், சரணமடைந்த அசோக் குமார், 2 லட்சம் ரூபாய்க்கான ஜாமீன் தொகையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.