சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, "தமிழக -கேரள எல்லைப் பகுதியான வண்ணாத்திப் பாறையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா?" என்று கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ என்.ராமாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் முழுவதுமாக சிதிலம் அடைந்த நிலையில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு பளியன்குடி, கூடலூர் கிழக்கு, குமுளி என மூன்று வழித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏற்கெனவே இதுதொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்தபின், இந்த மூன்று வழித்தடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் கேரள அரசாங்கத்தின் ASI என்ற தொண்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மங்கலதேவி கோவிலை திருச்சி ASI நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதனை கேரள நீதிமன்றத்திலேயே தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இதையும் படிங்க: “வாராரு… வாராரு… அழகர் வாராரு” மே 8-ல் சித்திரைத் திருவிழா தொடக்கம்! முழு விவரம் உள்ளே!
இதுதொடர்பாக கடந்த 19.1.2025 அன்று சென்னை வந்திருந்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்திருந்தார்.
அந்த வகையில், மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமிக்கு தான் திறக்கப்படுகிறது. அதை மாதாமாதம் பௌர்ணமிக்கு திறக்க வேண்டும். மங்கலதேவி கண்ணகி திருக்கோயிலை தமிழ்நாடு அரசே முழுவதுமாக புனரமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். வனத்துறையோடு இணைந்து அந்த திருக்கோயிலின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான ஐயப்ப பக்தர்கள் செல்லும் சபரிமலை பகுதியில் 5 ஏக்கர் நிலம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கேரள மாநில அறநிலையத் துறை அமைச்சரோடு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த பிரனாயி விஜயனிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்வதாக கேரள மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே, கேரளாவில் இருக்கக்கூடிய கண்ணகி கோவிலை மேம்படுத்தவும், மாதம்தோறும் பக்தர்கள் சென்று அங்கு வழிபடுவதற்கு முதலமைச்சரின் ஆலோசனையோடு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அமைச்சர் சேகர் பாபு பதிலளித்தார்.
தமிழக - கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை மாதந்தோறும் பெளர்ணமி தினத்தில் பக்தர்களின் வழிப்பாட்டுக்காக திறக்க வேண்டும் என்று கேரள அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.