தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 2) தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட 10 கோவில்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 7 ம் தேதி நடைபெறக் கூடிய கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளே மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்ய நேற்று இரவு சுமார் 4 மணி நேரம் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கும், பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம், உணவு, மருத்துவம் போன்ற வசதிகள் செய்யவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: "அரசு பள்ளிக்கு ரூ.1.30 கோடியில் கல்வி உபகரணங்கள்" - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டு!
இந்த மாத இறுதியில் பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் உள்ள மெகா திட்ட பணிகள் நிறைவு பெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு முன்பும் பின்பும் எந்த பணிகள் நிறைவு பெற உள்ளது? என்பதை விரைவில் ஊடகம் வாயிலாக தெரிவிக்க உள்ளோம்.
விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மெகா திட்ட பணியில் பக்தர்கள் வசதிக்காக போர்கால அடிப்படையில் முன்னுரிமை அளித்து பணிகள் விரைவில் முடிக்கப்படும்." என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.