புதுக்கோட்டை: அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நிலையில், “மூத்த அமைச்சர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு எந்த கருத்தையும் பேசுவதில்லை. மூத்த அமைச்சரை பற்றி கருத்து சொல்லும் உரிமை தனக்கு கிடையாது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி ஓட்டக்குளம் கண்மாயினை, ரூ.9.5 கோடி மதிப்பில் அசல் தரத்திற்கு உயர்த்துதல் மற்றும் மீட்டெடுக்கும் பணி இன்று (ஏப்ரல் 11) தொடங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இந்திய அரசியலில், அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. ஆளுநர் என்பவர் உபத்திரம் செய்யக்கூடியவராக இருக்கக்கூடாது. இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் ஆளுநர் ஒன்று ராஜினாமா செய்திருக்க வேண்டும், இல்லையென்றால் மத்திய அரசு அவரை திரும்ப பெற்று இருக்க வேண்டும்.
இனி நாங்கள் ஆளுநர் மாளிகை போக வேண்டியது இல்லை. கோப்பை அனுப்பினால் போதும் அனைத்து மசோதாக்களும் தானாக கையெழுத்தாகி வந்துவிடும். எடப்பாடி பழனிச்சாமி, அவர்களின் ஆட்சியை காப்பாற்ற பாஜகவோடு கொஞ்சி குழாவினார்.
அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது:
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை அவர்களது கட்சி விவகாரம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம், எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிரான எந்த விதமான மனநிலையும் மக்களிடத்தில் கிடையாது. அமித்ஷாவின் டார்கெட்டை முதலமைச்சர் உடைத்து, நொறுக்கி எறிவார். எங்களுடைய கட்சியை பொறுத்தவரை கூட்டணி என்பது வலிமையாகவும் பலத்தோடும் அசைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக! 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா அறிவிப்பு! |
எங்கள் கூட்டணியை உடைக்க முடியாது, நொறுக்க முடியாது. உடைத்தால் அவர்கள் உடைவார்களே தவிர நாங்கள் உடைய மாட்டோம். சணக்கியரைவிட மிகப்பெரிய ராஜதந்திரி தமிழ்நாடு முதலமைச்சர். அவருக்கு முன்பு அனைத்தும் அடிபட்டு போகும். அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது” என்றார்.
அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு:
அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, “மூத்த அமைச்சர்கள் பேசும்போது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு எந்த கருத்தையும் பேசுவதில்லை. பேசும்போது ஒருவர் இயல்பாக பேசுவது என்பது இயற்கை. வேண்டும் என்று யாரும் தவறுதலாக பேசுவது என்பது கிடையாது. மூத்த அமைச்சரை பற்றி கருத்து சொல்லும் உரிமை தனக்கு கிடையாது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பார். நடவடிக்கை எடுப்பது என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் தான் எடுப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்