சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், இன்று (ஏப்ரல் 9) சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், “சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை ஆகிய மூன்று இடங்களில் முதலை பண்ணைகள் உள்ளன. கோடை காலங்களில் கொள்ளிடம் பகுதியில் நீர் இன்றி முதலைகள், நீர் இருக்கும் ஆழமான இடத்திற்கு சென்று விடுகின்றன.
முதலை பண்ணை:
அணைக்கரை பகுதிகளில் இதுவரை 14 முதலைகள் பிடிக்கப்பட்டு மீண்டும் நீர்நிலையில் விடப்பட்டுள்ளது. முதலையால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதனால், அதற்கு அருகில் உள்ள சிதம்பரம் பகுதியில், முதலை பண்ணை அமைப்பதற்கு வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “வன விலங்குகள் இரை தேடி ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில், வனப்பகுதியிலேயே பலா, கிழங்கு வகை பயிர்கள், தண்ணீர் குளங்கள் ஆகியவை அமைக்கப்படுமா?” என சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே முதல்வரின் நோக்கம். காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாத்தனூர் முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தூக்கம் போனது" - மனம் திறந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! |
மேலும், வனத்துறை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்வதற்கு 500 எக்கர் நிலத்திற்கு, ரூ. 250 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று பல சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்தும் விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெய்வேலி சுரங்க பணிகளால் பாதிக்கபடும் நிலத்தடி நீர்:
இதனையடுத்து, “நெய்வேலி சுரங்கங்களை ஆதாரமாகக் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ரூ. 479 கோடி மதிப்பீட்டில் அளிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தற்போது பயன்பாட்டிற்கு வருவதற்கு தயாராக உள்ளது. கங்கைகொண்டான் பேரூராட்சியை சுற்றியுள்ள கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சிகளில், நெய்வேலி சுரங்க பணிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீருக்கு ஏற்றதாக இல்லை.
எனவே, கங்கைகொண்டான் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சிகளை இணைப்பதற்கு அரசு முன் வருமா? என சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 490 பேரூராட்சிகளில், 100 பேரூராட்சி என்ற அளவில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும், ரூ. 20 முதல் ரூ. 30 கோடியில் உள்ளூரிலிருந்தே தண்ணீரை எடுப்பதற்கு ஏற்கனவே நிதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்கைகொண்டான் பேரூராட்சியில் நிலத்தடி நீர் இருக்குமானால், அதற்கு புதிய திட்டம் உருவாக்கி பேரூராட்சிக்கு வழங்கலாம்.
அப்படி இல்லையெனில், ஏற்கனவே போடப்பட்டிருக்கும் குழாய்கள் மூலமாக நீட்டித்துக் கொடுத்தால், வழங்கப்படும் இடங்களுக்கு தண்ணீர் சரியாக கிடைக்குமா? கூடுதலாக கிடைக்குமா? என்பதை ஆராய்வு செய்யப்படும். கூடுதலாக கிடைக்குமென்றால் கங்கைகொண்டான் பேரூராட்சிக்கும் நீட்டித்து தரப்படும்” இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்