சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு ஒரு ஹஜ் இல்லம் அமைக்க உள்ளதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் 5 வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படுவது புனித ஹஜ் யாத்திரை. துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லீம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்குப் ஆண்டுதோறும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மே 16ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் உள்பட பிற மாநிலங்களில் இருந்து 5,614 பேர் இந்த புனித பயணம் மேற்கொண்டனர். இதில், புனித ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு 201 பெண்கள் உள்பட 401 பேருடன் முதல் ஹஜ் விமானம் மதினா நகரில் இருந்து சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இவர்களை அமைச்சர் நாசர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ., தென் மண்டல ஹஜ் கமிட்டி உறுப்பினர் ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., ஹஜ் கமிட்டி செயலாளர் எம்.ஏ. சித்திக், சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் நாகூர் நஜிமுத்தீன், ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணக்குடி அனிபா, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், அகமது அலி மற்றும் ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு ஒரு ஹஜ் இல்லம் அமைக்க உள்ளோம். 1 ஏக்கரில் அமைய உள்ள இந்த ஹஜ் இல்லம் கட்ட ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் கட்டுமான பணியை தொடங்கி வைப்பார். புனித ஹஜ் பயணத்தை முடித்து விட்டு வந்தவர்களை வரவேற்று உள்ளோம். தமிழகத்தில் ஹஜ் பயணத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 200 பேருக்கு ஒரு தன்னார்வலர் நிறுவனம் பொறுப்பேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?" - முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை கேள்வி! |
குறிப்பாக மதுரை, கோவை, திருச்சி பகுதியில் இருப்பவர்கள் அதிகளவில் இந்த பயணத்தில் இடம்பெறுகிறார்கள். இவர்கள் அங்கிருந்து சென்னை வந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதை தவிர்க்க நேரடியாக பயணம் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். காஷ்மீரில் போர் சூழல் ஏற்பட்ட போது, சுற்றுலா சென்றவர்களை பத்திரமாக அழைத்து வர முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதேபோல் இஸ்ரேல், ஈரான் நாடுகள் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள தமிழர்கள் தமிழகம் திரும்ப விரும்பினால், தொடர்பு கொள்வதற்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை மீட்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லியில் தமிழர்கள் வாழும் இடத்தில் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. அதற்கான நிவாரணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். உலகின் எந்த மூலையில் தமிழர்கள் பாதிபிக்குட்பட்டாலும், நமது முதலமைச்சர் அவர்களை மீட்டுப் பாதுகாப்பாக வைப்பார்” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்