கோயம்புத்தூர்: தென்மேற்கு பருவ மழை கேரளா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (மே 24) தொடங்கியுள்ளது. நேற்று தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ரத்னகிரிக்கு வடக்கு மற்றும் வடமேற்கே 30 கிமீ தொலைவில் நிலவுகிறது.
இதன் காரணமாக 2 நாட்களுக்கு கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கோவையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை அவினாசி மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (மே 24) இரவு, நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த ஆய்விற்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்குவதை தவிர்க்க, தேவையான நடவடிக்கைகள் அதிகாரிகளால் எடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் அருமையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்து இருக்கின்றனர். எவ்வளவு மழை பெய்தாலும், அதை எதி்ர்கொள்ளும் அளவிற்கு நம்முடைய அதிகாரிகள் வேலை செய்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ''இந்தியாவில் பரவும் கொரோனா திரிபு ஆபத்தானதா?" - பிரபல சுகாதார நிபுணர்கள் சொல்வது இது தான்!
பலத்த மழை பெய்து வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வால்பாறையில் ஆர்டிஓ ஒருவர் பணியமர்த்தப்பட்டு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு அனைத்து துறையினரும் இணைந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். குப்பைகளை சாக்கடையில் போடாமல் இருந்தால் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். பொது மக்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.'' என்று தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.