புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மற்றும் ஆவின் குளிர் பதனக் கிடங்கு ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கோயில்கள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் கூடுவது குறித்து தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கம் அளித்தார்.
சர்ச்சை குறித்து விளக்கம்
மேலும், கோயில் மற்றும் கிரிக்கெட் மைதானத்தில் அதிக மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வது நாகரிகமல்ல என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தது சர்ச்சையானது.
அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ''நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் அப்படி கூறவில்லை. நான் கூறிய கருத்து என்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
'அமுல்' பூச்சாண்டிக்கு பயப்படமாட்டோம்
தொடர்ந்து பேசிய அவர், ''விவசாயிகள் லிட்டருக்கு 10 ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆவின் மட்டும் தான் சீரான விலையை ஆண்டு முழுவதும் கொடுத்து வருகிறது. ஆவினில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களை தவிர்க்க முடியாது.
ஆவின் நிறுவனத்திற்கு தற்காலிக பணியாளர்களை பணிக்கு எடுக்கஉள்ளோம். அவர்கள் ஆவின் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது.
அமுல் வருகிறது என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆவின் பாலை மக்கள் நம்ப வேண்டும். விவசாயிகளை தக்க வைக்க அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த ஒரு வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
'பணப் பட்டுவாடா பிரச்சனை இப்போதில்லை'
தொடர்ந்து ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் அதிகமாக கொள்முதல் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு, '' விவசாயிகள் ஆவின் நிறுவனத்தை நோக்கி வரவேண்டும், ஆவின் நிறுவனத்தை நம்ப வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு காலதாமதமாக பண பட்டுவாடா செய்யப்பட்டதால் விவசாயிகள் தனியார் பால் நிறுவனத்தை நோக்கி சென்றனர்.
ஆனால், தற்போது அவர்களை ஆவின் நிறுவனம் நோக்கி வருவதற்கு உண்டான வேலைகளை நிறுவனம் எடுத்து வருகிறது. பத்து நாட்களுக்கு ஒரு முறை தற்போது விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் பூத்
ஆவின் மட்டுமே விற்பனை செய்யப்படும் கடைகளில் வேறு எந்த பொருளும் விற்பனை செய்யப்படுவது கிடையாது. ஆனால் ஆவின் பூத் கொடுக்கும் போது அவர்கள் பல்வேறு விதமான பொருட்களை அங்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோன்று ஆவின் பொருள்கள் மட்டுமல்லாது பிற பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களை கண்காணிப்பதற்கு மார்க்கெட்டிங் லெவல் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆவின் நிறுவனம் சார்பாக தற்போது 200 மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கூட்டுவதற்கு உண்டான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் எடுத்து வருகிறது.
கூடுதல் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது'' என கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.