சென்னை: எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
எந்தவொரு தவறும் செய்யாமல் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு மனதளவிலும், உடலளவிலும் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ளும் குழந்தைகளுக்கு இத்தகைய உதவித்தொகை பேருதவியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் விடுமுறை முடிந்து சட்டமன்றம் இன்று கூடியது. இதில் கேள்வி நேரத்தின் போது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்குமா? என சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி கேள்வியெழுப்பினார். இதற்கு அமைச்சர் பதிலளித்து மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 908 ஆக உள்ளது. அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க 76 கூட்டுறவு சிகிச்சை மையங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளன.
இதையும் படிங்க |
மருத்துவ சிகிச்சையில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 341 பேர் உள்ளனர். முதலமைச்சரின் வலியுறுத்தலுக்கு ஏற்ப, கூட்டுறவு மருத்துவ சிகிச்சை மையங்களும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை, ஏஆர்டி மையங்களில் 3372, தென்காசியில் 1224 என மொத்தம் 4596 எச்ஐவி தொற்றாளர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கூட்டு மருத்துவ சிகிச்சை மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.
2009 ஆம் ஆண்டு எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 கோடியை வைப்பு நிதியாக தந்து, அறக்கட்டளை ஒன்றை முன்னால் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்த நிதி தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்த நிதியில், 18 வயதிற்கு உட்பட்ட எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 7618 பேருக்கு 2024-25 ஆண்டில் மட்டும் ரூ.1 கோடியே 89 லட்சம் செலவிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கை விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
முன்னதாக, சமூக நலத்துறையால் வழங்கப்படும் பாதுகாப்பு திட்டங்களை பொறுத்தவரையில், முதியோருக்கான உதவித் தொகை ரூ.1000இல் இருந்து ரூ.1200 ஆகவும் , மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000 இல் இருந்து ரூ.1500 ஆகவும், 75% பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,000 ரூபாய் உயர்த்தப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.