வேலூர்: தென்னாட்டுக்கு ஒரு பெரியார், வடநாட்டுக்கு ஒரு அம்பேத்கர். அவர் யாருக்காக உழைத்தாரோ, அதே மக்களுக்காக தான் எங்கள் கட்சியும் உழைக்கிறது என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சமத்துவ நாள் விழா வேலூர் மாவட்டம் காட்பாடியில் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கனிம வளம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு, பல்வேறு துறைகளின் கீழ் 1,253 பயனாளிகளுக்கு ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,“அம்பேத்கர் அனைத்து சமூக மக்களுக்காக பாடுபட்டவர். ஒருமுறை பம்பாய் பத்திரிகையாளர்கள், காந்தி, முகமது அலி ஜின்னா மற்றும் அம்பேத்கர் ஆகிய தலைவர்களை சந்திப்பதற்காக நேரம் கேட்டனர். அதன்படி, அவர்கள் கூறிய நேரத்தில் முதலில் காந்தியாரை சந்திக்க சென்றனர். ஆனால், காந்தி உடல் நலக்குறைவு காரணமாக முன்பாகவே தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த பனையூர் வாசல் தாண்டிய விஜய்! |
அடுத்தது ஜின்னாவை சந்திக்க சென்றார்கள். அவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், பத்திரிக்கையாளர்கள் அம்பேத்கர் மட்டும் எங்கு விழுத்திருக்க போகிறார் என எண்ணி சாப்பிடுவதற்கு சென்றுவிட்டனர். பின்னர், சாப்பிட்டுவிட்டு அம்பேத்கர் வீட்டு வழியாக சென்றுள்ளனர். அப்போது, அவரது வீட்டின் விளக்கு எரிந்துள்ளது. இதனால், வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அம்பேத்கர் கதவை திறந்தார்.
அப்போது, அவரிடம் காந்தியும், ஜின்னாவும் உறங்கிவிட்டனர். நீங்கள் இன்னும் உறங்கவில்லையா? என பத்திரிக்கையாளர்கள கேள்வி எழுப்பினர். அப்போது அம்பேத்கர். ‘காந்தியின் இன மக்கள் விழித்துக் கொண்டார்கள். எனவே, அவர் நிம்மதியாக உறங்கிவிட்டார். ஜின்னாவின் மக்கள் விழித்துக்கொண்டு ஒரு நாடு கேட்டுவிட்டார்கள். அதனால், அவரும் நிம்மதியாக தூங்கிவிட்டார். ஆனால், என்னுடைய மக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக தான் நான் விழித்திருக்கிறேன்' என்றார் அம்பேத்கர்.
அம்பேத்கர் அனைத்து சமூக மக்களுக்காகவும் பாடுபட்டவர். எனவே, சாதி வித்தியாசம் இன்றி அனைத்து வீடுகளிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைத்து அவரை வணங்க வேண்டும். அவர் யாருக்காக உழைத்தாரோ, அதே மக்களுக்காக தான் எங்கள் கட்சியும் உழைக்கிறது. தென்னாட்டுக்கு ஒரு பெரியார் வடநாட்டுக்கு ஒரு அம்பேத்கர்." என்று துரைமுருகன் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்