சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிற்சங்கம் தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சங்கத்தினர், சாம்சங் நிறுவனம் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
ஊதியம் உயர்வானது 2025 -26 ஆம் ஆண்டுக்கு ஒரு தொழிலாளிக்கு 9 ஆயிரம் ரூபாயும், 2026-2027 ஆண்டுக்கு 4500 ரூபாயும், 2027-28 ஆண்டிற்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டியிருக்கிறது.
இந்த நிறுவனம் 25 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து தொழிலாளர் நலத் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஏற்கெனவே வேலை நிறுத்தம் நடைபெற்றபோது இவர்களின் கோரிக்கை தொடர்பாக தொழில் துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. ஊழியர்கள் பணியிடை நீக்கம் தொடர்பாக நிச்சயம் நல்ல தீர்வு வரும்." என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
''பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்ப்பது தொழிற்சங்கத்தின் பொறுப்பு'' - சௌந்தரராஜன்!
சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறும்போது, ''சாம்சங் நிறுவனம் அமைச்சருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் எங்களுடைய சங்கத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு அமைப்பை உருவாக்கி எங்களை பலவீனப்படுத்தப் பார்த்தார்கள். அது முடியாது. ஊதிய உயர்வு பிரச்சனை இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இல்லை என்றால் மீண்டும் பணியில் சேர்க்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
இதையும் படிங்க: "கஞ்சா வியாபாரியை காட்டிக் கொடுன்னு...போலீஸ் மிரட்டுது" - கமிஷனர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்!
இன்றைய தினம் பணியிடை நீக்கம் குறித்து பேசி பெரும்பாலான தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேசாமல் போய்விடக்கூடாது என்பதே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணம். எனவே ஊதிய உயர்வு குறித்து மட்டும் தற்போது பேசப்பட்டது. தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொழிற்சங்கத்தின் பொறுப்பு.
நாங்கள் செய்வோம். உடனடியாக நீதிமன்றம் செல்ல முடியாது. நிச்சயமாக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பணியிடை நீக்கம் செய்யப்ப்டட தொழிலாளர்களை வேலையில் சேர்ப்பது குறித்து தான் இருக்கும்." என்று அவர் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.