சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போலி சாதிச்சான்றிதழ்கள் புழக்கத்தை தடுக்க தமிழ்நாடு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இட ஒதுக்கீட்டு கொள்கையின் நோக்கம் வீணாகிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூரைச் சேர்ந்த சம்பூர்ணம் தனது மகன் மற்றும் மகளுக்கு பட்டியல் இன சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 2022ஆம் ஆண்டு அளித்த விண்ணப்பத்தை வருவாய்த்துறை நிராகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது மகன் மற்றும் மகளுக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தனது சகோதரரின் பிள்ளைகளுக்குப் பட்டியல் இன சான்றிதழ் வழங்கியிருப்பதால், தனக்கும் பெற உரிமை உள்ளது. அதனால், சான்றிதழ் வழங்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வேந்திரன், ஏற்கனவே மனுதாரரின் மகனுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. அதனால், தற்போது பட்டியல் இன சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது அனைவரும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவதற்காக பழங்குடியினர் சான்றிதழ்களைப் பெற மிகப்பெரிய அளவில் மோசடி செய்து வருகின்றனர். அந்த மோசடிகள் தடுக்கப்பட வேண்டும். போலி சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ரிசார்ட் கட்டப்படும் அரசாணை - தமிழ்நாடு அரசு வாபஸ்! |
இந்திய அரசியலமைப்பின் படி, உண்மையாக பட்டியல் இன சமுதாயத மக்களுக்கே இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பொது வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட வேண்டும். சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், அது உண்மையா? போலியா? என சரிபார்க்கப்பட வேண்டும். போலி எனத் தெரிந்தால் உடனடியாக சான்றிதழை ரத்து செய்து விட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பட்டியல் இன சாதி சான்றிதழ்கள் வழங்கியதில் சந்தேகம் இருந்தால், அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிக்கு அறிவுறுத்தும் படி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.