சென்னை: நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து கால விரயம் (Time Waste) ஏற்படுவதை தவிர்க்க சமரசம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் வேலூரில் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்காக 38 மாவட்டங்கள் மற்றும் 146 தாலுகாக்களில் மத்தியஸ்த மையங்கள் செயல்படுகின்றன. தற்போது, அதன் 20-வது ஆண்டு நிறைவையொட்டி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (ஏப்ரல் 9) புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், சமரசக் குழுவின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தர், கமிட்டி உறுப்பினர்களான நீதிபதி அனிதா சுமத், நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பக்தர்கள் வழிபாடு எப்போது? - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில்! |
அதேபோல, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சமரச மையம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியை வேலூர் மாவட்ட நீதிபதி முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஊர்வலம் சத்துவாச்சாரி முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் நீதிமன்றத்தை அடைந்தது, பின்னர் சமரச மையம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
இதில், சமரச மையத்தில் செய்யப்படும் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக காக்கப்படும், வழக்கறிஞர்களும் உதவலாம், சமரசம் மூலம் நீங்கள் ஒப்புக் கொள்ளும் உகந்த தீர்வை எட்டலாம், சமரசம் ஏற்படவில்லை என்றால் வழக்கை நீதிமன்றத்தில் தொடரலாம் என விளக்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து பேசிய மாவட்ட நீதிபதி முருகன், சென்னை உயர் நீதிமன்றம் மூலம் சமரசம் மையம் துவங்கப்பட்டு 20 ஆண்டுகளாகிறது. தற்போது, இருபதாம் ஆண்டு நிகழ்ச்சியை இங்கு நாம் வரவேற்கிறோம். 2018 முதல் இந்த சமரச மையம் செயல்பட்டது. கொரோனாவுக்கு பிறகு இன்று மீண்டும் சமரச மையம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இதில் பங்கேற்று மக்களும் தங்களின் வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக முடிவை எட்டலாம்," எனத் தெரிவித்தார்.
மத்தியஸ்தம் என்பது வழக்குத் தொடுப்பவர்கள், சம்மந்தப்பட்டவருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பிலும் உள்ள தகராறுகளை விரைவாகத் தீர்ப்பதற்கான ஒரு முறையாகும். தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையம் நாட்டிலேயே முதல் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட மத்தியஸ்த மையம் கடந்த ஏப்ரல் 9, 2005 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.