சென்னை: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெயில் சுட்டெரிக்கப் போவதாக வானிலை ஆய்வு மையம் சூடான அப்பேட்டை தந்துள்ளது. அதே சமயத்தில், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 9 மணியிலேயே பிற்பகல் 12 மணியை போல வெயில் கொளுத்துகிறது. இவ்வாறு வெயிலில் தகித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் சில பகுதிகளை, கடந்த ஒருவாரமாக மழை பெய்து கூல் ஆக்கியது. குறிப்பாக, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சேலம், திருச்சி, நாமக்கல், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.
இவ்வாறு தமிழகத்தின் ஒருபகுதியில் மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கடலோர ஆந்திரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் முதலமைச்சர்! |
அதே சமயத்தில், இன்று ஒருசில இடங்களில் வெயில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 19ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெயிலின் கொடுமையை போக்க அடிக்கடி தண்ணீர் குடிப்பது, பழ வகைகளை உண்பது, இளநீர் குடிப்பது நல்லது. மேலும், அத்தியாவசிய தேவை இல்லாத பட்சத்தில், முற்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
