திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் மூதாட்டியின் உதட்டைக் கடித்து துப்பியதால், ஜோலார்பேட்டைரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டியைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி ஜெயசுந்தரி (64) சமோசா தயாரிக்கும் தொழிற்கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், ஜெயசுந்தரி இன்று (ஜூன் 4) காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஜெயசுந்தரியை பிடித்து, வாயைக் கடித்து துப்பியுள்ளார். அதனால், வலி தாங்காத ஜெயசுந்தரி அலறி கத்தியுள்ளார். அந்த சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மூதாட்டி நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பொதுமக்கள் பிடியில் சிக்கியிருந்த அந்த இளைஞரை விசாரித்த போது, அவர் பெயர் விஷ்ணு (30) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவரது நடவடிக்கையில் சிறிது மாற்றம் தெரிந்ததால், காயமடைந்த விஷ்ணுவை ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு விஷ்ணுவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளனர். அதனால், வழக்கு எதுவும் பதிவு செய்யாத போலீசார், சிகிச்சைக்குப் பிறகு மன நல மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.