- By இரா சிவக்குமார்
மதுரை: சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவம் குறித்த பார்வை தற்போது பரவலாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கு சென்றாலும் மிதிவண்டியிலேயே பயணித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள். ''இந்த வயதில் இப்படி ஒரு சுறுசுறுப்பா? என்று காண்போர் அனைவரையும் வியக்க வைக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் நாளை ஐக்கிய நாடுகள் சபை 'உலக மிதிவண்டி தினம்' என அறிவித்து கொண்டாடி வரும் நிலையில், மதுரையில் எங்கே சென்றாலும் மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்தும் மீனாட்சி அம்மாள் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க கிளம்பினோம்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் எங்கோ செல்வதற்காக சைக்கிளை உள்ளே இருந்து வெளியே இறக்கி நிறுத்திக் கொண்டிருந்தார். நம்மை வரவேற்ற அவரிடம், நாம் சென்ற விவரத்தைக் கூறினோம். அப்போது, கோயிலுக்குச் செல்வதாக அவர் கூறவும், அவரது பயணத்தை தடுக்காமல் சைக்கிளில் அவர் முன்னே செல்ல நாம் அவரை பின் தொடர்ந்தோம். சைக்கிளில் ஏறி அமர்ந்தவுடன், அதனை வேகமாக மிதித்து ஓட்டத் தொடங்கினார். நாம் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தாலும், அவர் வேகமாகவே முன்னே சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட மீனாட்சி அம்மாள், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு கடைக்குச் சென்றார். அங்கு கோயில் பூஜைகளுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிய அவர் மீண்டும், மதுரை கோ.புதூர் அருகே உள்ள மண்மலை மேடு கருப்பசாமி கோயிலிலுக்கு சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார்.
கருப்பசாமி கோயிலை சில நிமிடங்களில் சென்றடைந்த அவர், சைக்கிளை நிறுத்தியவுடன், அங்கு காத்திருந்த பக்தகள் அவரைப் பார்த்து முக முலர்ச்சியோடு வரவேற்றனர். அதற்கு காரணம் அந்த கோயில் பூசாரி அவர் தான். நேரம் தாழ்த்தாமல் பக்தர்களிடம் அர்ச்சனை தட்டுகளை வாங்கி கருவறைக்குச் சென்று பூஜைகள் செய்ய ஆரம்பித்தார் மீனாட்சி அம்மாள்.
பக்தர்கள் சென்ற பின் நம்மிடம் பேசிய அவர், "இந்த கோயிலில் நீண்டகாலமாக பூசாரியாக இருக்கிறேன். கோயிலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தினமும் கடைக்குச் சென்று நானே வாங்கி வருவேன். அதற்கு எனது சைக்கிளையே பயன்படுத்தி வருகிறேன்" என்றார்.
'உடல் நலம் காப்பாற்றப்படும்'
மீனாட்சி அம்மாளைப் பார்த்தால் 56 வயது என்று சொல்ல முடியாது. காரணம் இந்த சைக்கிளிங் தான் என்கிறார் அவர். "என்னுடைய எனர்ஜியின் ரகசியம் என் மிதிவண்டி என்று சொல்வதில் எனக்கு எப்போதுமே பெருமை தான். சைக்கிள் ஓட்டுவதை நம் வாழ்வின் ஒரு பகுதியாக கருத வேண்டும். இப்போதெல்லாம் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்குச் செல்வதற்கு கூட இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி பயிற்சி மேற்கொண்டால் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு உழைக்கும் திறன் அதிகரிக்கும்" என்று ஹெல்த் டிப்ஸை வழங்குகிறார்.
மேலும், அவர் எந்தவித செலவும் இல்லாத ஒரு அற்புதமான வாகனம் தான் மிதிவண்டி என்றும் தனது கணவர், பிள்ளைகள் எல்லோருமே சைக்கிளை பயன்படுத்துவதாக பெருமிதத்துடன் கூறுகிறார். "என் பிள்ளைகள் எனக்கும் இரு சக்கர வாகனம் வாங்கித் தருகிறேன் என்கிறார்கள். ஆனால், நான் மறுத்து விட்டேன். என்னுடைய சிறு வயதில் நான் ஓட்டிய சைக்கிளை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். மிதிவண்டி நமது நண்பன்" என்றார்.
'மருத்துவமனைக்கு சென்றதே இல்லை'
மீனாட்சி அம்மாள் மகளும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான கவிதா திலீபன் கூறுகையில், ''எனது தாயாரிடம் இருந்து தான் என் திறமைக்கான ஊக்கங்களை பெற்றேன். நான் பிறந்ததிலிருந்து இப்போது வரை எங்கு சென்றாலும் சைக்கிள் செல்வதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுவரை எனது அம்மாவோ, அப்பாவோ மருத்துவமனைக்கு சென்றதே இல்லை. இதற்குக் காரணம் சைக்கிளிங் தான்.
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களும் இயங்கக் கூடிய ஒரு பயிற்சியாக இந்த சைக்கிளிங் உள்ளது. தற்போது உடல் உழைப்பு என்பது மிகக் குறைவாகிவிட்ட நிலையில் இது போன்று சைக்கிளிங் பயிற்சியை அனைவரும் மேற்கொள்வது நல்லது. அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு சைக்கிளில் வருவோரை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை'' என்றார்.
மிதிவண்டி ஓட்டிச் செல்வதன் வாயிலாக சுற்றுச்சூழலுக்கு பெருமளவு நாம் பங்களிப்பு செய்கிறோம். அது மட்டுமன்றி நமது உடல்நலனும் சிறப்பான வகையில் மேம்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை பொது மக்களிடம் கொண்டு செல்ல பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
'ஆரோக்கியத்தை விரும்பினால் சைக்கிள் பெஸ்ட்'
மீனாட்சி அம்மாளின் அண்டை வீட்டாரான ரங்கன் கூறுகையில், ''எனது மனைவியின் உற்ற தோழி தான் மீனாட்சி அம்மாள். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சைக்கிள் செல்வது தான் வழக்கம். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று நடைபெறும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை சைக்கிளிலேயே மீனாட்சி கொண்டு வந்து விடுவார். ஆகையால் சைக்கிள் ஓட்டுவது என்பது நமது ஆரோக்கியத்திற்கான சிறப்பான வழி. ஆரோக்கியத்தை விரும்பும் எல்லோரும் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்'' என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.