சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மக்களில் 97% பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநரகம் தமிழ்நாட்டில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் பதிவாகி வரும் நிலையில், பொதுமக்கள் முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருப்பின் கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் தீவிர தன்மை குறைவாக இருப்பதற்கு இங்கு கூட்டு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதே காரணம் என்று சமீபத்திய ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறை பல்வேறு கால இடைவெளிகளில் ஐந்து கட்டங்களாக (PHASES) இந்த பரிசோதனையை நடத்தியது. அதன் மூலம் கரோனா பெருந்தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது என்பதனை ரத்த பரிசோதனையின் (SERO-SURVEY) மூலமாக நடத்தியிருக்கிறது.
முதல் கட்ட ஆய்வுகள் அக்டோபர் 2020 இல் மேற்கொள்ளப்பட்டு 32 விழுக்காடு (32%) கரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் காணப்படுவது கண்டறியப்பட்டது. இரண்டாம் கட்ட ஆய்வு ஏப்ரல் 2021 இல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 29 விழுக்காடு(29%) அளவே மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுவது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவி ஏற்கும் போது கரோனா பெருந்தொற்று டெல்டா வகை வைரஸ்களால் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய சூழலில், தமிழக முதலமைச்சரின் தீவிர நடவடிக்கைகளின் மூலமாக தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி பணிகள் மிகவும் துரிதப் படுத்தப்பட்டன. அதன் விளைவாக, பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட மூன்றாம் கட்ட ஆய்வில் சுமார் 70 விழுக்காடு (70%) மக்களுக்கு கரோனா பெருந்தொற்றிற்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான நோய் தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக டிசம்பர் 2021 இல் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட ஆய்வில் சுமார் 87 விழுக்காடு (84%) மக்கள் கரோனா பெருந்தொற்றிற்கு எதிராக எதிர்ப்பு சக்தியினை பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலமாக கரோனா பெருந்தொற்றினால் ஏற்படக்கூடிய மரணங்கள் தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது 2025 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 97 விழுக்காடு (97%) மக்கள் கரோனா பெருந்தொற்றிற்கு எதிரான எதிர்ப்பு சக்தினை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் காணப்பட்டாலும் நோயின் தீவிரத் தன்மை மிகப் பெரிய அளவிற்கு குறைந்தே காணப்படுகிறது. இது தற்போதைய தமிழக அரசின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்