ETV Bharat / state

தமிழ்நாட்டை உலுக்கும் 'கிட்னி திருட்டு': 2 தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த 'நோட்டீஸ்'

கிட்னி விற்பனை செய்யும் இடைத் தரகர்கள் தொடர்பாகவும், தனியார் மருத்துவமனைகள் தொடர்பாகவும் ஏதேனும் புகார்கள் வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 18, 2025 at 7:15 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத் தறியாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்ய வைக்கும் விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் தற்போது நிலவும் வறுமையை காரணம் காட்டி சிலர் புரோக்கர்களாக செயல்பட்டு கிட்னியை விற்பனை செய்ய வைப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்னியை கொடுப்பவர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கித் தருவதாக கூறி தனியார் மருத்துவமனைகளுக்கு ரகசியமாக அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்ய வைப்பது தெரிய வந்துள்ளது.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட மருத்துவ திட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான குழு பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது. மேலும், கிட்னியை விற்பனை செய்தவர்களையும் சந்தித்து உண்மை நிலையை கேட்டறிந்தது.

மாவட்ட மருத்துவ திட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கிட்னி விற்பனையில் மூளையாக செயல்பட்ட இடைத் தரகர் ஆனந்தன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கிட்னி அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாகக் கூறப்படும் ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இடைத் தரகர்கள் எங்கு எல்லாம் செயல்பட்டார்கள்? எந்தெந்த மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முழுவதும் உள்ள இணை இயக்குநர்களுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதில் இடைத்தரகர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே, நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக தீர விசாரித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின் தொடருங்கள்