சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “உள்துறை அமைச்சர் நேற்று (ஏப்ரல் 11) சென்னைக்கு வந்து பாஜக - அதிமுக கூட்டணியை அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் உடன்பாடு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் டெல்லிக்கு சென்றார். பிறகு செங்கோட்டையன் இருமுறை சென்றார்.
அதிமுக - பாஜக கூட்டணி நிலைக்குமா?:
தற்போது அதிமுக தலைமையில் கூட்டணி என்று அறிவித்துள்ளனர். ஆனால், இந்த அறிவிப்பின் போது எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முதலில் 5 நிமிடம் கூட்டணி தலைவர் என்ற முறையில் எடப்பாடியும், பின்னர் அமித் ஷாவும் பேசியிருந்தால் கூட்டணி ஆரோக்கியமாக உள்ளது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி மெளன சாமியாக பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க முழுக்க முழுக்க மத்திய அமைச்சர் அமித் ஷா மட்டுமே பேசினார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுக! 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா அறிவிப்பு! |
அதிமுக - பாஜக கூட்டணி நிலைக்குமா? நீடிக்குமா? அல்லது மூன்று மாதங்களில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிலைகுலையுமா? என்பது தெரியவில்லை. பாஜகவுக்கு எடுபிடி போல் இருந்து கொண்டு நேற்றைய நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்கள்.
எனவே, இந்த கூட்டணி நீடித்தாலும், நீடிக்காவிடாலும், திமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டப் பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். திமுகவுக்கு அரணாக இருப்பேன். ஆளும் அரசுக்கு எதிராக எதுவும் நாம் பேசவில்லை, எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை. நம் கூட்டணியில் இருப்பதற்கும் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்