கன்னியாகுமரி: பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்குமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆவேசமாக பதிலளித்தார். பாஜக மதவாத இயக்கம் என தவெக தலைவர் விஜய்க்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.
மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ராஜ்குமார் இல்ல திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்குமா?" என நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "பாஜக ஒரு மதவாத இயக்கம் என விஜய் ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் அவர் ஒருபோதும் பாஜகவுடனும், அக்கட்சியுடன் இருப்பவர்களுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார் என நினைக்கிறேன். அதையே அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விரும்புவார்கள் என்பதும் அவருக்கு தெரியும்” எனக் கூறினார்.
முன்னதாக, கன்னியாகுமரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. மக்களை பாதிக்கின்ற வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர அனுமதிக்க கூடாது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் இங்குள்ள அரசியல் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் ஆலோசனை செய்துவிட்டு அதற்கு உண்டான பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு கழிவுகள் வெளியேற்றம், தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் மதிமுக மற்றும் தலைவர் வைகோவின் பங்கு அதிகம்" என அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இண்டியா கூட்டணி பலம் இழந்துள்ளது என ப.சிதம்பரம் கூறியது ஏன் எனத் தெரியவில்லை. சில சூழ்நிலை காரணமாக கடந்த தேர்தலில் இண்டியா கூட்டணி தோல்வியடைந்தது. அடுத்து வரும் தேர்தலில், இண்டியா கூட்டணி மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி பெறும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பெரும் அளவில் ஊழல் நடைபெறுகிறது. இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“ஆங்கிலம் இருக்குது, எதற்கு இந்தி?” மத்திய அரசின் ’புதிய கல்விக் கொள்கை’ என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத அனைத்து மாநிலங்களுக்கும் விரோதமாக உள்ளது. மூன்றாவது மொழியை ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது? எனக் கேட்கின்றனர். உலகளாவிய மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது எதற்கு இந்தி? தமிழக மாணவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் ஆங்கிலப் புலமை தான். அதற்கு இருமொழி கொள்கை தான் காரணம் என துரை வைகோ கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.