மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிரே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது ஊர் மக்கள் உணவு வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு ரஜினி என்பவர் டாடா ஏஸ் வாகனத்தில் உணவு எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து அவர் உணவு வழங்கிவிட்டு வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரின் இரண்டு வயது மகன் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, வாகன ஓட்டுநர் ரஜினி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து செம்பனார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய உயிரிழந்த குழந்தையின் தாய், “நான் சமைத்துக் கொண்டிருந்தேன். எனது மாமியார்தான் குழந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தார். வாகனத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அனைவரும் கூட்டமாக உணவு வாங்க சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வாகன ஓட்டி என் மகன் அருகில் இருப்பதைப் பார்க்காமல் வாகனத்தை ஏற்றி அவனை கொன்றுள்ளார்." எனக் கண்ணீர் மல்க கூறினார்.
பாமகவினர் புகார்: இந்நிலையில் செம்பனார்கோவில் பாமக ஒன்றிய செயலாளர் ஏ.கே.செந்தில்குமார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியவாறு டாடா ஏஸ் வாகனத்தைப் புகைப்படம் எடுத்துள்ளார். இதைப் பார்த்த எஸ்.ஐ சந்தோஷ்குமார் ஏன் போட்டோ எடுக்கிறாய்? என்று கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் எஸ்.ஐ சந்தோஷ்குமார், செந்தில்குமாரைச் சட்டையைப் பிடித்துக் காவல் நிலையம் இழுத்துச் சென்று தாக்கியதாக பாமகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இதனைக் கண்டித்து பாமகவினர் காவல் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் உயிரிழப்பு - திருவண்ணாமலையில் சோகம்! |
இதைத் தொடர்ந்து, டிஎஸ்பி பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து நிலையில் பாமக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 5 பேரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதையடுத்து பாமகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திலிருந்த டாடா ஏஸ் வாகனத்தை கைபற்றி காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ள போலீசார், அந்த வாகனத்தை ஓட்டி வந்த ரஜினி என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.