மயிலாடுதுறை: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தாயார் உயிரிழந்தது தெரியாமல், மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரும் என 5 மணி நேரமாக குழந்தைகள் காத்திருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா கீழராதாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (42). இவருக்கு ஒரு 17 வயதில் மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் மகள் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

பாக்கியலட்சுமியின் கணவர் மணிகண்டன் உயிரிழந்து விட்டதால், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி தனது பிள்ளைகளுடன் உறவினர் பாதுகாப்பில் மயிலாடுதுறை அருகே சீப்பிலியூர் பகுதியில் வசித்து வந்தார். பாக்கியலட்சுமி கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.
ஏற்கனவே, பாக்கியலட்சுமிக்கு தீரா சளி தொல்லை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (மே 15) திடீரென அவரது வயிறு மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தனது மகனுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க சொல்லி, மகனிடம் ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு பாக்கியலட்சுமிக்கு மூன்று ஊசி போட்டுள்ளனர். இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின் பாக்கியலட்சுமி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால், பாக்கியலட்சுமியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரது உறவினர்கள் ஏன் அவரை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றம் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியதுடன் தாங்கள் பாக்கியலட்சுமியை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் என பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகன் காத்திருந்த நிலையில் 5 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இந்நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் பாக்கியலட்சுமி உயிரிழந்தார்.
இதனால் கடும் சோகத்திற்குள்ளான உறவினர்கள் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் பாக்கியலட்சுமி உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாக்கியலெட்சுமி உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வரை உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கப் போவதில்லை என கூறி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமார் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பாக்கியலட்சுமி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வென்டிலேட்டர் வசதியுள்ள உள்ள 3 ஆம்புலன்ஸ்கள் வெளியே சென்று விட்டதால் காலதாமதம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், வட்டாட்சியர் சுகுமார், உயிரிழந்த பாக்கியலெட்சுமியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு; நெல்லையை அதிர விட்ட சம்பவம்!
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.